சில கவிதைகளுடன் கடவுள் அலையும் நகரம் – சிங்கப்பூரில்

oviyam

ஒவியம்: சந்துரு (மலேசியா)

மலேசிய எழுத்தாளர்களான கே.பாலமுருகனின் முதல் கவிதைதொகுப்பு “கடவுள் அலையும் நகரம்” சிங்கப்பூர் தங்கமீன் பதிப்பக வெளியீடாக மே-2009 இறுதியில் சிங்கப்பூரில் நவீன கவிதைகள் மீதான கருத்தரங்குடன் நடைபெறுகிறது. நிகழ்வு பற்றிய விபரங்கள் விரைவில் தெரிவிக்கப்படும். கே.பாலமுருகன் “அநங்கம்” எனும் இலக்கிய பத்திரிக்கையை ஆசிரியர் பொறுப்பேற்று நடத்தி வருகிறார்.

இந்த நிகழ்வில் மற்றொரு மலேசிய எழுத்தாளரான ஜாசின் தேவராஜன் அவர்களின் சிறுகதை தொகுப்பையும் தங்கமீன் பதிப்பகம் வெளியிடுகிறது. இவர்  “மௌனம்” எனும் கவிதைக்கான இலக்கிய இதழை ஆசிரியர் பொறுப்பேற்று நடத்தி வருகிறார்.

கே.பாலமுருகனின் சில கவிதைகள்

 

பள்ளத்தில் நெளியும் மரணம்

இறந்தவர்களெல்லாம்
பள்ளத்தில் விழுந்து
மீண்டுமொருமுறை
மரணிக்க முயற்சிக்கிறார்கள்!

அவர்களின் தற்கொலைகள்
தோல்வியில் முடிகின்றன!

இந்தப் பள்ளங்கள்
ஒருவரை ஒருமுறைதான்
இரட்சிக்கும்!

நிலத்தின்
சதைப் பிடிப்பில்
விழுந்த காயங்களைச்
சுமந்து கொண்டு
மரணம் நெளியும்
பள்ளங்கள்!

வீட்டுக்கொரு
பள்ளம் உருவாகி
உயிரோடிருப்பவர்களுக்காகக்
காத்திருக்கின்றன!

அவர்கள்
பள்ளத்தில் விழும்
கணங்களை
அங்குலம் அங்குலமாக
அளவெடுத்து
நீண்டுருக்கிறது அவர்களுக்கான
மரணங்கள்!

நிலம்தோறும்
வளர்ந்திருக்கும் பள்ளங்கள்
மரணத்தைக் கண்டு ஓடுபவர்களை
மிக அலட்சியமாகக்
கொன்று குவிக்க
கடவுள் ஏற்படுத்தியிருக்கும்
பலவீனம்!

 கடைசி பேருந்து

கடைசி பேருந்திற்காக
நின்றிருந்த போது
இரவு அடர்ந்து
வளர்ந்திருந்தது!

மனித இடைவெளி
விழுந்து
நகரம் இறந்திருந்தது!

சாலையின் பிரதான
குப்பை தொட்டி
கிளர்ச்சியாளர்கள்
அப்பொழுதுதான் தொடங்குகிறார்கள்!

பேருந்தின் காத்திருப்பு
இருக்கையிலிருந்து
விழித்தெழுகிறான் ஒருவன்!

நகர மனிதர்களின்
சலனம்
காணமல் போயிருந்தது!

விரைவு உணவுகளின்
மிச்சம் மீதியில்
கைகள் படர்ந்து மேய்ந்து கொண்டிருக்கின்றன!

ஊடுருவி ஊடுருவி
யார் யாரோ திடீரென
நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள்!

கறுப்பு மனிதர்களின்
நடமாட்டம்!
பேருந்து நிற்குமிடம் மட்டும்
குறைந்த வெளிச்சத்தில். . .

ஒரு சிறுமி
சாலையைக் கடந்து
வெருங்கால்களில் இருண்டுவிட்ட
கடைவரிசைகளை நோக்கி
ஓடும்போதுதான்
கடைசி பேருந்து
வந்து சேர்ந்திருந்தது!

இரு நகர பயணிகள் மட்டும்
முன் இருக்கையின் இரும்பு கம்பியில்
தலைக்கவிழ்த்து உறங்கியிருக்க
அபார வெளிச்சம்!

கடைசி பேருந்து
கொஞ்சம் தாமதமாகவே
வந்திருக்கலாம்!

நாங்கள் பூக்களாக இருக்கிறோம்

கட்டுப்பாடுகளற்ற ஓர் உலகத்தில்
வாழ்ந்தே பழகிவிட்டோம்!
எங்கள் வீதிகளின்
மரங்களெல்லாம் பேசுகின்றன!
நாங்கள் நடந்து வருகையில்
கிளைகளால் உரசி
எங்களை தேற்றுகின்றன!

எங்கள் பறவைகள்
உறக்கத்திலும் சிறகுகளை
முடக்குவதில்லை!
சேற்றுக் குளங்கள்
எங்களின் தாய் பூமியாக
இருந்து வருகின்றன!
நாங்கள் பறவையாகவும் இருந்திருக்கிறோம்!

எங்கள் சாக்கடையிலும்
தங்க மீன்கள்தான்!
சிரிக்கின்றன பேசுகின்றன!
நாங்கள் கடவுள்களை
வணங்குவதில்லை. . .
நாங்கள் பூக்களாகவே இருக்கிறோம்
படையலுக்குச் சென்றதில்லை!

எங்கள் மரங்கள்
எங்களை உதிர்த்ததில்லை!
என்ன ஆச்சர்யம்?
நாங்கள் பூக்களாகவே இருக்கின்றோம்!

copyright: bala_barathi@hotmail.com